இந்த வீடியோ என்னை இப்படி கிறுக்க வைத்தது..
ஒன்றின் அழிவிலிருந்து மற்றொன்றை காக்கும் இந்த வாழ்க்கை முறையை ஒரு சாத்தானால் தானே அமைக்க முடியும்..? எனக்கு கடவுள் என்ற தனி ஒருவன் மீது நம்பிக்கை இல்லாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம்..
ஆனால் இந்த படம் இன்னும் சில முக்கியமான விசயங்களை உணர்த்துகிறது.. அது.. "ஒன்று இன்னொன்றாய் மாறுகிறது.. " "வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு.." என்பனவற்றை.. இது ஒரு உணவு சுழற்சி.. இந்த விலங்கும் மற்றொரு விலங்கிற்கோ , நுண்ணியிர்க்கோ உணவாகும்..
ஆக்கம் என்ற ஒன்றே அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான்.. அழிவு என்ற ஒன்றே ஆக்கத்திற்கானதுதான்.. இங்கு அனைத்தும் மாற்றத்திற்காகவே இயங்குகிறது.. மாற்றம் எப்படியும் நிகழ்ந்து விடுகிறது விரும்பியபடியோ விரும்பாதபடியோ.. மனித பார்வையில் விரும்பியபடி நிகழ்வது மகிழ்ச்சி ..விரும்பாத படி நிகழ்வது துன்பம்.. இயற்கையின் பார்வை வேறாகவும் இருக்கலாம்.. வலித்து குழந்தை பிறப்பது போல.. வரம் துன்பமாக கூட நமக்கு தெரியலாம்..
இயற்கையில் யாரும் தாதா இல்லை.. எல்லோரும் ஒன்று தான். இத்தகைய இயற்கை சமத்துவம் சோகப்பாடல்களை போல ஆறுதலளிக்கும் விசயம்தான்.. இந்த இயற்கைதான் கடவுள் என்பது மனிதனுக்கு புரிய மறுக்கிறது.. மகிழ்சியை தரும் சமத்துவம் நாம் கண்டிப்பாக தேடியடைய வேண்டிய செயற்கையையாக செய்து பெற வேண்டிய ஒன்று தான்.. நல்ல உணவுக்கு நல்ல சமையல் தேவைப்படுவது போல..
இது ஒவ்வொருவனின் மனநிலையை பொருத்து ஆன்மீகமாகவும் நாத்திகமாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது..
இருப்பதில் திருப்தி கொள்ளும் நல்ல மனமுடையவனும் , எதையும் முயற்சி செய்து பார்க்க மனமில்லாத இயலாதவனும் ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.. எதையும் மோதிப் பார்த்து வெற்றி பெறும் போராட்ட குணமுடையவனும் எது கிடைத்தாலும் அடங்காத ஆசையுள்ளவனும் நாத்திகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் .. இவனை போன்றவன் ஆன்மீகத்திலும் போலியாக உண்டென்பது வேறு கதை..
இந்த முரண்பாடான நபர்களே அவரவரது கொள்கையை அழித்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டுமிருப்பவர்கள்..
மனிதர்கள் அனைவரும் ஆசைப்பட கூடாதென்று பேராசைப்பட்டு அதில் வெற்றி பெறாத போதும் புத்தரின் உதடுகளில் எப்படி புன்னகை எப்போதும் இருக்க முடியும் என நான் சிந்தித்ததுண்டு அதற்கான விடையாக நான் காண்பது இயற்கை சமத்துவம் பற்றிய நினைப்பாக இருக்கக் கூடும் என்பது தான்..
Comments
Post a Comment